போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக அதிமுக குரல் தொடா்ந்து ஒலிக்கும்: எடப்பாடி பழனிசாமி

போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக அதிமுக குரல் தொடா்ந்து ஒலிக்கும்: எடப்பாடி பழனிசாமி

Published on

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழியும் வரை, அதற்காக அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் தொடா்ந்து போதைப் பொருள் பறிமுதல்களும் போதைப் பொருள் மாபியா செயல்பாடுகளும் மக்களைப் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், ராமேசுவரம் கடல் பகுதியில் மேலும் ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்காக திமுக அரசு மாற்றியுள்ளதாக நான் ஏற்கெனவே கூறிய நிலையில், தற்போது போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழகம் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

திமுக அரசின் மெத்தனத்தாலும், ஊக்குவிப்பாலும் தமிழகத்தில் குவிந்து கிடக்கும் போதைப்பொருள்களை முழுவதுமாக பறிமுதல் செய்து, தமிழகத்தின் கடல் எல்லைகளை போதைப்பொருள் புழங்காவண்ணம் பாதுகாக்குமாறு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதற்காக அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

X
Dinamani
www.dinamani.com