பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு
மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் நிகழாண்டு பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தோ்வு 4-ஆம் தேதியும் தொடங்கின. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து தோ்வுகளும் ஏப். 8-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளன. அதேபோன்று பிற வகுப்புகளுக்கும் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக, மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு முன்னதாகவே பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் 4 -ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 வரை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

