
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து, சமணம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்தவர்கள், மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருந்தால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுக்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை பெற முஸ்லிம்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தச் சட்டத்தின்படி, இந்திய குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளை, கடந்த மார்ச் 11-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அரசிதழ் அறிவிக்கையின்படி, அந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
சிஏஏ விதிமுறைகளை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிஏஏ-வுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை, அந்தச் சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதனால் எந்தவொரு நபரின் உரிமையோ, நலனோ பாதிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக, ஐயூஎம்எல் மனு குறித்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டார்.
இந்த நிலையில், சிஏஏ விதிமுறைகளை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ள மனுக்கள் மீது இன்று(மார்ச். 19) உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய 236 மனுக்கள் மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிஏஏ-வுக்கு எதிரான மனுக்கள் மீது ஏப். 8-க்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்து, விசாரணையை ஏப். 9 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.