இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம்

இசைத் திறனுக்குத்தான் விருது என்று டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி பதில் கொடுத்துள்ளது.
இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம்

சென்னை: சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கான ஒரே அளவுகோல், ஒருவர் தனது வாழ்நாள் முழுக்க இசைக்கான பணியில் நீடித்து ஈடுபடுவதும், அவரது இசைத் திறனும்தான் என்று பாடகிகள் ரஞ்சனி-காயத்ரிக்கு மியூசிக் அகாதெமி தலைவர் சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார்.

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

தனக்கு எழுதிய கடிதத்தை சமூக தளத்தில் பதிவு செய்திருந்தது நாகரீகமான செயல் அல்ல என்றும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் மற்றும் அர்த்தங்கள் மிக மோசமானதாக அமைந்திருந்ததால் அதிருப்தி அடைந்ததாகவும் குறிப்பிட்ட என். முரளி, அவர்களது கடிதத்துக்கு காட்டமாக ஒரு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் முரளி கூறியிருப்பதாவது, பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், மியூசிக் அகாதெமிக்கு அனுப்பியிருக்கும் கடிதம் தேவையற்ற மற்றும் அவதூறான கூற்றுக்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில், மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிரான கடுஞ்சொற்கள் நிரம்பியதாக இருக்கிறது.

இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம்
டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி: இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு

டி.எம். கிருஷ்ணா, சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, மார்கழி மாதத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள மாட்டோம் என்று பாடகிகள் எடுத்திருக்கும் முடிவானது, இசைக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் மிக மோசமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாதெமிக்கு அனுப்பிய கடிதத்தை, தாங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பதையும் நான் கவனித்தேன், இது ஒழுங்கீனமானது, இந்த கடிதத்தின் காரணத்தையும், அதன் பின்னணியையும் சந்தேகமடைய வைக்கிறது என்றும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவரது இசைத் திறனை அடிப்படையாக வைத்தே விருது வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது வெளிப்படையான, ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கு, விதிவிலக்கான இசை வாழ்க்கைக்காகவே செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், பெரியாரை பின்பற்றுவோருக்கு விருதா என இசைக் கலைஞர்கள் சிலர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி, ஹரிகதா புகழ் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதோடு, ஆண்டு இறுதியில் தொடங்கி ஜனவரியில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் மியூசிக் அகாதெமியை மறைமுகமாக மிரட்டும் தொணியில் தெரிவித்திருந்தனர்.

ரஞ்சனி - காயத்ரி இணையினர், டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்ட இசைக் கச்சேரியில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும், டிசம்பர் 15 முதல் ஜனவரி 1 வரை நடைபெறும் இசை மாநாட்டிலும் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்து விட்டனர்.

அதுபோலவே, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தி வரும் துஷ்யந்த் ஸ்ரீதர், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அந்நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டேன் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை மியூசிக் அகாதெமியின் இசை மாநாடு, டி.எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் என்பதால், தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என்று ரஞ்சனி - காயத்ரி இணையினர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அவர் ஓரிடத்தில் இருக்கிறார் என்றால், அங்கு நாங்கள் செல்ல மாட்டோம், நாங்கள், சென்னை மியூசிக் அகாதெமியின் ஒட்டுமொத்த கூட்டத்தையும் புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை மியூசிக் அகாதெமி, இசைக் கலைஞர்கள் மற்றும் கர்நாடக இசை ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக இசை உலகத்துக்கு மிகப்பெரிய சேதத்தை கிருஷ்ணா ஏற்படுத்தியிருக்கிறார். வேண்டுமென்றே, மிகவும் விருப்பத்துடன் இசையுலகின் அடிப்படை நம்பிக்கைகளை நசுக்கினார், மிகவும் போற்றப்படும் தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களை அவமரியாதை செய்தார் என்றும் இசைப் பாடகியான சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளிக்கு சகோதரிகள் அனுப்பிய கடிதத்தின் நகல், அவர்களது சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோலவே, எதிர்ப்பு தெரிவித்திருந்த துஷ்யந்த் ஸ்ரீதர், அவரது பெயரை விருதுக்குத் தேர்வு செய்திருப்பதை என்னால் கேள்வி எழுப்ப இயலாது. தர்மம், அயோத்தியா, ஸ்ரீ ராமர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், கிருஷ்ணாவின் கருத்துகளால் நான் துயரமடைந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இசைக் கலைஞர் விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் கிருஷ்ண மோகன் மற்றும் ராம்குமார் மோகன் உள்ளிட்டோரும் தங்களது பங்குக்கு, விருது வழங்குவதற்கு எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இவர்களுக்கு எல்லாம் மேலாக, சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மியூசிக் அகாதெமி தனக்கு வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித் தர முடிவு செய்திருக்கிறேன் என்றும், எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com