நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

எஸ்.சூரியமூர்த்திக்கு பதிலாக, வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை நள்ளிரவில் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வி.எஸ்.மாதேஸ்வரன்
வி.எஸ்.மாதேஸ்வரன்

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்திக்கு பதிலாக, வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை நள்ளிரவில் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பற்றி வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் கட்சி தலைமை இந்த மாற்றத்தை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடுகிறது. ஈரோடு தொகுதியில் போட்டியிட விரும்பியே, கடந்த மாதம் 4–ஆம் தேதி பெருந்துறையில் பிரமாண்ட மாநாட்டை அந்த கட்சி நடத்தியது. ஆனால், திமுக தலைமை அவர்கள் கேட்பதற்கு முன்பாக, 2019–இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாமக்கல் தொகுதியை மீண்டும் ஒதுக்கியது. வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொண்ட பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், கடந்த திங்கள்கிழமை ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழுவை கூட்டி வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது:

திமுகவில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மக்களவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைப்பதில் தடுமாறி வரும் சூழலில், திமுக தலைவா் கூட்டணி கட்சிகளின் மனம் கோணாதபடி அரவணைத்து, தேவையான தொகுதிகளைப் பிரித்து வழங்கி உள்ளாா். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை முதல்வா் ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா். அதனை நிறைவேற்றும் வகையில், கூட்டணி கட்சித் தலைவா்கள் செயல்படுவா். முழுமூச்சாக எங்களுடைய வேட்பாளா் நாமக்கல் தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவாா். 2019 தோ்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்ற அனுபவம் எங்களிடம் உள்ளது. அப்போது பெற்ற வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும், இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் சூரியமூா்த்தி வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

30 ஆண்டு கால அரசியல் அனுபவமும், மக்களோடு மக்களாக சேவையாற்றிய அனுபவமும் அவரிடம் உள்ளது. அந்தத் தகுதியின் அடிப்படையிலேயே வேட்பாளராக நாங்கள் அவரை இந்தத் தொகுதியில் நிற்க வைத்துள்ளோம். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தோ்தல் அறிக்கை வெளியிட்டு, வீடுவீடாகச் சென்று மக்களிடையே பிரசாரம் மேற்கொள்வோம். திமுக கூட்டணி நாமக்கல் தொகுதியில் மகத்தான வெற்றி பெறும் என்றாா்.

அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரியைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி கொமதேக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சியின் தீவிர விசுவாசியான இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, 2008–இல் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டோரை விமர்சித்து அவர் பேசிய விடியோ, ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இதனால் கொமதேகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.ஆஸ்.ஈஸ்வரன்,விடியோவை வெளியிட்டோர் மீதும், அதனை பரப்புவோர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம், இவற்றையெல்லாம் கடந்து எங்களுடைய வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார். அதுமட்டுமின்றி, வெளிமாவட்டதைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தது, கொமதேகவினருக்கும், உள்ளூர் கவுண்டர் சமுதாய மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்ட அளவில் கூட்டணியில் உள்ள தலைவர்களும் இது வெற்றியை பாதிக்கும், வேட்பாளரை மாற்றுவது குறித்து பரிசீலியுங்கள் என்ற கருத்தை முன்வைத்தனர்.

வி.எஸ்.மாதேஸ்வரன்
கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான்: பாமக வேட்பாளர் பட்டியல்!

இந்த நிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொமதேக அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அந்த கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கூடி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வேட்பாளர் பிரச்னையால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம். கூட்டணியில் உள்ளவர்களும் திருப்திகரமாக இல்லை. சாதி ரீதியாக அவர் பேசியதாக வெளியான விடியோவால் சூரியமூர்த்தியும் கவலையில் உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் பிரசாரத்தை மேற்கொள்வது கடினமானது. இதனால் வேட்பாளரை மாற்றம் செய்வது, சூரியமூர்த்திக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு அளிப்பது என்ற முடிவை ஆட்சிமன்றக் குழு ஒருமனதாக எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், நாமக்கல் கொமதேக வேட்பாளர் எஸ்.சூரியமூர்த்திக்கு மாற்றாக, நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கண்ணீரும், மகிழ்ச்சியும்... நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடந்த சனிக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்பது உறுதியானது. இதையடுத்து தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்த வி.எஸ்.மாதேஸ்வரன் தனியாக சென்று கண்ணீர் விட்டு அழுதார். ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். சூரியமூர்த்தி தன்னுடைய ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியில் இருந்தார்.

இதற்கிடையே வியாழக்கிழமை நள்ளிரவு வேட்பாளர் மாற்றம் உறுதியாகவே, வி.எஸ்.மாதேஸ்வரன் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தார். கிடைத்த வாய்ப்பு கைகூடவில்லையே என்ற கவலையில் சூரியமூர்த்தி கண்கலங்கினார். இரு நாள்களுக்கு முன், வேட்பாளராக களமிறக்கப்பட்டதால், இனி ஈரோடு அல்ல நாமக்கல் தான் மக்கள் பணியாற்றுவதற்காக எனது மாவட்டம் என்ற வகையில், நாமக்கல்–சேலம் சாலையில் ரூ.20 ஆயிரம் வாடகையில் வீடு ஒன்றை பார்த்து அங்கு பால்காய்ச்சி குடிபுகுந்தார். அடுத்த ஓரிரு நாளிலேயே ஏற்பட்ட வேட்பாளர் மாற்றம் சூரியமூர்த்தியையும், ஆதரவாளர்களைம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் கொமதேக புதிய வேட்பாளர்: வி.எஸ்.மாதேஸ்வரன் விவரம்:

தொகுதி: நாமக்கல்

பெயர்: வி.எஸ்.மாதேஸ்வரன்

பெற்றோர்: கே.செல்லப்பக் கவுண்டர் - வரதம்மாள்

பிறந்த தேதி: 21.06.1972 (52)

படிப்பு: டிப்ளமோ(பாலிடெக்னிக்)

தொழில்: லாரி, விவசாயம்

கட்சி பதவி: நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர்.

முந்தைய தேர்தல்கள் - 2016-இல் நாமக்கல் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com