தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி வேட்பாளராக வைத்தியலிங்கம் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் போட்டியிடும் மேலும் 7 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கரூரில் ஜோதிமணி, கன்னியாகுமரியில் விஜய் வசந்த், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மேலும், திருவள்ளூர் தனித் தொகுதியில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கடலூரில் விஷ்ணு பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.