அதே களம், அதே முகம்: ஆட்டம்தான் வேறு!

வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட டி. எம்.கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகிய இரு வேட்பாளர்களும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எம்.கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம், மருத்துவர் பசுபதி.
எம்.கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம், மருத்துவர் பசுபதி.

வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட டி. எம்.கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகிய இரு வேட்பாளர்களும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இந்த முறை களத்தில் நடந்துள்ள பல மாற்றங்கள் யாருக்கு வாய்ப்பாக அமையும் என்பதே இந்தத் தொகுதியில் எழும் கேள்வி.

வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினரும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் மகனுமான டி.எம்.கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர்- தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, வேலூர் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவினாலும் தேர்தல் களம் கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கான போட்டியாகத்தான் இருக்கிறது. எனினும், இவ்விரு வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

குறிப்பாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், 2014 தேர்தலின்போது பாஜகவின் தாமரைச் சின்னத்திலும், 2019 தேர்தலின்போது அதிமுக, பாஜக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்ட நிலையில், இம்முறை மீண்டும் பாஜக அணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த 11 மாதங்களாக தொகுதியில் ஏ.சி.சண்முகம் மேற்கொண்டுள்ள இலவச மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகள் இவருக்கு பலம் சேர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக ஒரே அணியில் இருந்தன. அப்போது, தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு அலையே திமுகவுக்கு வெற்றிவாய்ப்பை உருவாக்கித் தந்தது என்பதற்கு வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் பேரவைத் தொகுதிகளே காரணம்.

மற்ற மூன்று பேரவைத் தொகுதிகளைவிட இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் உள்ள இம்மூன்று பேரவைத் தொகுதிகளில்தான் திமுக அதிகப்படியான வாக்குகள் பெற்று 8,141 வாக்குகள்

வித்தியாசத்தில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். அதேசமயம், வன்னியர்கள் அதிகம் உள்ள கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் ஏ.சி.சண்முகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

ஆனால், இம்முறை பாஜக அணியிலிருந்து விலகி அதிமுக தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மட்டுமன்றி, பாஜக அணியில் பாமக இணைந்திருப்பதும் வேலூர் தொகுதி அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அதாவது, கடந்த முறை பாஜக இடம் பெற்றிருந்த அணிக்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் திமுகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த முறை பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு திமுக மட்டுமன்றி கூடுதல் வாய்ப்பாக அதிமுகவும் உள்ளது.

இதனால், பாஜகவுக்கு எதிராக திமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டாலே அது ஏ.சி.சண்முகத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டே கடந்த முறை திமுகவுக்கு பலமாக அமைந்த இஸ்லாமியர் வாக்குகளைப் பிரிக்கும் வியூகத்தில் அதிமுக சார்பில் முதலில் ஆம்பூரைச் சேர்ந்த சூப்பர் நேஷனல் பார்ட்டி நிறுவனர்- தலைவரான கலிலூர் ரகுமான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து பின்வாங்கிக் கொண்டார்.

இதனால், அவசரஅவசரமாக வேட்பாளர்களை அலசி இறுதியில் வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.பசுபதியை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக.

இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்தில் களம் இறக்கப்பட இருந்த கலிலூர் ரகுமான் கடைசி நேரத்தில் பின்வாங்கிக் கொண்டதன் பின்னணியில் திமுக இருப்பதாகப் பேச்சு உள்ளது.

இஸ்லாமியர் நலனுக்காக நாடாளுமன்றத்திலும், கல்விக் குழுவிலும் தான் மேற்கொண்ட முயற்சிகளை கதிர்ஆனந்த் எடுத்துரைப்பதும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களுக்கான வாக்கெடுப்பின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிமுக, பாமக மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசியதும் திமுகவுக்கு சாதகமாக அமையக்கூடும்.

அதேநேரம், வன்னியரான பசுபதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதும், பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருப்பதும் திமுகவுக்கு எதிராக வன்னியர் வாக்குகள் சிதற வழிகோலக்கூடும்.

வேலூர் தேர்தல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் தரப்பினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் தேர்தலில் யாருக்கு வாய்ப்பாக அமையும் என்பதே வேலூரின் வெப்பத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com