எங்களது அறிவிக்கப்படாத பிரதமர் ராகுல் காந்தி! துரை வைகோ சிறப்பு பேட்டி

எங்களது அறிவிக்கப்படாத பிரதமர் ராகுல் காந்தி! துரை வைகோ சிறப்பு பேட்டி

நமது சிறப்பு நிருபர்

பம்பரம் சின்னம் கேட்டு போராடுவது, கூட்டணி தலைமையுடன் முரண்பாடு எழாமல் உறவைக் காப்பது, நேரடி தேர்தல் கள அனுபவத்தை எதிர்கொள்வது, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை சமாளிப்பது என பன்முக அழுத்தங்களுக்கு மத்தியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து...

மதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள விருதுநகர் தொகுதியில் நிற்காமல் திருச்சி மக்களவைத் தொகுதியைத் தேர்வு செய்தது ஏன்?

1998, 1999 என தொடர்ந்து இரு முறை சிவகாசி தொகுதியில் எனது தந்தை வைகோ வெற்றி பெற்றார். 2004-இல் மூன்றாவது முறையாகவும் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வென்ற தொகுதி அது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பால் சிவகாசி தொகுதியே இல்லாமல் போனது. அதிலிருந்த பேரவைத் தொகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி எம்.பி. தொகுதிக்கும், கோவில்பட்டி தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கும் சென்றுவிட்டன. சிவகாசி, சாத்தூர், விருதுநகரை உள்ளடக்கி விருதுநகர் எம்.பி. தொகுதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒரு தொகுதி என்ற குறுகிய வட்டத்துக்குள் மதிமுக-வை அடைத்துவிடக் கூடாது.

வாரிசு என்பதால் மதிமுகவில் வெகு விரைவில் உங்களுக்கு உயர் பதவி கிடைத்து விட்டதாக சொல்கிறார்களே?

அரசியலுக்கு வரும் விருப்பமோ, ஆசையோ, வேட்கையோ எனக்குத் துளியும் கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலில் தந்தையின் சுற்றுப்பயணத்தையும், இதர தேர்தல் களப் பணிகளையும் நான் திட்டமிட்டு தொண்டர்களுடன் பணியாற்றினேன். அதனால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், என்னை கட்சிப் பதவியில் அமர்த்த குரல் கொடுத்தனர். பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதால் வேறுவழியின்றி அவர்களின் கோரிக்கையை தந்தை ஏற்றுக் கொண்டார். நிர்வாகக் குழுவில் உள்ள 106 பேரில் 104 பேர் என்னை ஆதரித்தனர். பின்னர், கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவி, பின்னர் முதன்மைச் செயலர் பதவி, இப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக நிற்கிறேன்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது மதிமுக-வின் விருப்பப் பட்டியலில் திருச்சி இருந்ததா?

திருச்சி, விருதுநகர், மயிலாடுதுறை, சென்னையில் ஒரு தொகுதி என 4 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்திருந்தோம். தாயுள்ளத்தோடு திருச்சியை ஒதுக்கிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இம்முறையும் வேறு 8 பேரின் பட்டியலை பரிந்துரைத்தேன். ஆனால், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை நிற்கச் செய்துவிட்டனர்.

திருச்சி அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க நீங்கள் பேசியது மதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான இணக்கமற்ற சூழலின் வெளிப்பாடா?

உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு கட்சி நிர்வாகி ஒருவர் யோசனை தெரிவித்தபோது உணர்ச்சிப்பெருக்குடன் அவ்வாறு பேச நேரிட்டது. அதன் பிறகு, திமுக-வின் முக்கியத் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே என்னை நன்றாக நடத்துகின்றனர். திருச்சியில் நடந்த நிகழ்வு கடந்து போக வேண்டிய ஒன்று. இப்போது, எல்லாம் சரியாகி விட்டது.

பம்பரம் சின்னம் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதா?

பத்து ஆண்டுகளுக்கு முன்பே சின்னம் குறித்த பிரச்னை எழுந்ததில் சரியான புள்ளிவிவரங்களை அளித்து வாதிட எங்களது வழக்குரைஞர்கள் தவறிவிட்டனர். இந்த முறை உரிய தகவல்களை அளித்துள்ளோம். பம்பரம் சின்னம் கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது.

என்ன நம்பிக்கையில் அப்படி நினைக்கிறீர்கள்? கிடைக்காவிட்டால்?

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கெனவே போட்டியிட்ட குக்கர், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. ஆனால், எதிர்க் கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு மட்டும் அவை கோரும் சின்னம் மறுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதற்கு இதுவே சிறந்த உதாரணம். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் தீப்பெட்டி சின்னத்தை இரண்டாவது விருப்பமாக அளித்துள்ளோம்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாமல் "இந்தியா' கூட்டணி தேர்தல் களம் காண்பது பின்னடைவை ஏற்படுத்தாதா?

மதிமுக-வுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் "இந்தியா' கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் ராகுல் ஒருவரே. தென்னிந்தியாவிலும் இதே நிலைதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதைப் போல, இந்தத் தேர்தல் என்பது யார் பிரதமர் என்பது முக்கியமல்ல. யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே முக்கியம். "இந்தியா' கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, தமிழகத்திலிருந்து திமுக கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகச் சுட்டிக்காட்டும். எங்களது அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியே.

"இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகிறதே?

ஒரு குடும்பத்திலேயே உறுப்பினர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை இணைத்து அமைத்துள்ள "இந்தியா' கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கும் அவரவர் கொள்கை அடிப்படையில், அவரவர் சார்ந்த மாநிலங்களுக்கென சில கொள்கை முடிவுகள் இருக்கலாம். எனினும், மதவாத சக்திகளுக்கு இடம் அளித்துவிடக் கூடாது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியபோது நான்தான் முதலில் வரவேற்றேன். தமிழகத்தில் பாஜக நுழைய அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக திராவிட இயக்கங்கள் பாஜக-வை புறம் தள்ள வேண்டும். அந்த அடிப்படையில் அதிமுக முடிவை வரவேற்கிறேன்.

அதிமுக தனியாக அணி அமைத்துப் போட்டியிடுவதால், அது பாஜக எதிர்ப்பு என பார்க்கப்படுகிறதா?

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே. பழனிசாமி வந்துவிட்டார். ஆனால், அவர்கள் பாஜக வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார்களா என்பது சந்தேகமே. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் இணையலாம். இந்தச் சந்தேகம் சிறுபான்மையினருக்கு உள்ளது.

தமிழகத்தில் "இந்தியா' கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

தமிழகத்தில் 39-க்கு 39 இடங்களை எங்களது கூட்டணி கைப்பற்றும். இதுதான் உண்மை. சில தவறான கருத்துக்கணிப்புகள் அவர்களது உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும். தமிழகத்துக்கு அதிக திட்டங்களும், கேட்கும் நிதியும் கிடைக்க வேண்டுமெனில் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளனர்.

திருச்சி தொகுதியில் வாக்காளர்களை ஈர்க்க என்ன வாக்குறுதியை அளிக்கப்போகிறீர்கள்?

திருச்சியில் பன்னாட்டு புதிய விமான முனையம் திறந்தும் பயன் இல்லை. பெரிய விமானங்கள் வந்து செல்ல ஓடுதள வசதியில்லை. ஓடுதளம், இதர கட்டமைப்புகளுக்கு நிலம் எடுத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தாமல், கட்டடத்தை மட்டும் திறப்பதில் கவனம் செலுத்திவிட்டது. ஓடுதள வசதி ஏற்படுத்தி அனைத்து கட்டமைப்புகளை உருவாக்கி பல நாடுகளில் இருந்து பெரிய விமானங்களும், கூடுதல் விமானங்களும் திருச்சியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், தொழில்வளம், சுற்றுலா மேம்படும். கந்தர்வக் கோட்டையில் முந்திரி மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும். புதுக்கோட்டையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைத்து, ரயில் நிலையம் அமைத்து தரப்படும். ஒரு எம்.பி. என்ற வகையில் என்னால் முடிந்த அளவும், சக்தியை மீறியும் இயன்றதை செய்து தருவேன்.

உங்களுடைய தந்தை வைகோவின் அரசியல் அரிச்சுவடியில் இருந்து நீங்கள் கற்ற படிப்பினை...

குடும்பத்துக்காக உழைத்ததைவிட தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்காகவும் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அவர். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர். எனக்கோ, எனது சகோதரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கோ எதையும் செய்யவில்லை என வருத்தப்படுவார். ஆனால், எங்களுக்கு நல்ல கல்வி கிடைக்கச் செய்தார். பொருளாதார ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ யாரிடமும் பரிந்துரைக்கு செல்வது அவருக்குப் பிடிக்காது. நாங்களும் அதை விரும்பவில்லை. குடும்பத்திலிருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதையும் அவர் விரும்பவில்லை.

படம்: வி. நாகமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com