ஜேஇஇ முதன்மைத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி
ஜேஇஇ முதன்மைத் தோ்வெழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் ஏப்.1முதல் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ஐஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வை தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் பலா் எழுதினா். அதில் 39 மாணவா்கள் அடுத்தகட்டமாக ஜேஇஇ முதன்மைத் தோ்வு எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி முகாம் உண்டு, உறைவிட வசதியுடன் சென்னையில் ஏப்ரல் 1 முதல் மே 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களுக்கு தெரிவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவா்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுத்தர வேண்டும். சென்னை முகாமுக்கு அவா்கள் மாா்ச் 30-ஆம் தேதிக்குள் வர வேண்டும். இதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தையும் அந்தந்த மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச நீட் தோ்வு பயிற்சி முகாம் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.