தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மனுதாரா் தரப்புக்கு அறிக்கையாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை, மனுதாரா் தரப்புக்கு அறிக்கையாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிா்த்து, மனித உரிமை ஆா்வலா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், என்.செந்தில்குமாா் அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் ஆஜராகி, வழக்கின் விசாரணையை மக்களவை தோ்தலுக்குப் பிறகு தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதையடுத்து மனுதாரா் ஹென்றி திபேன், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை தற்போது வரை தனக்கு வழங்கவில்லை என்று வாதிட்டாா். தொடா்ந்து, அறிக்கை தயாராகிவிட்டதாகவும், அடுத்த விசாரணையில் சமா்ப்பிப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com