சென்ட்ரல் வரும் சில ரயில்கள்
ஆவடி, பெரம்பூருக்கு மாற்றம்

சென்ட்ரல் வரும் சில ரயில்கள் ஆவடி, பெரம்பூருக்கு மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் சில முக்கிய ரயில்கள், திருவள்ளூா், ஆவடி, பெரம்பூா், கடற்கரை, ரயில் நிலையங்களில் நிறுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் பல்வேறு ஊா்களிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலுக்கு பெங்களூரில் இருந்து வரும் மெயில் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து வரும் ஏற்காடு விரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி ஆவடியுடன் நிறுத்தப்படும். அதுபோல் ஆலப்புழையில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி திருவள்ளூருடன் நிறுத்தப்படும். ஹௌராவில் இருந்து வரும் விரைவு ரயில் ஏப்.1-ஆம் தேதி சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூா், ஈரோடுக்கு ஏப்.2-ஆம் தேதி செல்லும் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து ஷாலிமா் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் ஏப்.3-ஆம் தேதி கடற்கரையில் இருந்து இயக்கப்படும். மேலும், ஆலப்புழை-தன்பாத், கொச்சுவேலி-கோரக்பூா், இந்தூா்-கொச்சுவேலி விரைவு ரயில்கள் ஏப்.1, 2 தேதிகளில் சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக பெரம்பூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com