தமிழகத்தில் விஐபி தொகுதிகள் 17; வெளியூர் வேட்பாளர்கள் 26!

தமிழகத்தில் விஐபி தொகுதிகள் 17; வெளியூர் வேட்பாளர்கள் 26!
Updated on
2 min read

தமிழகத்திகள் 17 மக்களவைத் தொகுதிகள் விஐபிக்கள் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 16 தொகுதிகளில் களமிறங்கும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 26 பேர் வெளியூர்காரர்கள்.

தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. கடந்த சில ஆண்டு களாக தொகுதி மக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாதபோதிலும், நாடறிந்த பிரபலங்கள் என்ற அடிப்படையில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள். தொழிலதிபர்கள் எனப் பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இதன்மூலம், பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெறுகின்றன.

இந்த மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரமுகர்கள் போட்டியிடும் 17 தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. முன்னணித் தலைவர்களின் மகன், மகள், மனைவி, அக்காள், தம்பி உறவு முறையிலுள்ள வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில், இந்த முறை முன்னாள் ஆளுநர், முன்னாள் முதல்வரும் களமிறங்கி இருக்கிறார்கள்.

தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், வேலூர், தருமபுரி, நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் தேர்தல் கள நிகழ்வுகள் தமிழகத்தைக் கடந்தும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

தென் சென்னை: தென் சென்னை தொகுதியில் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களான முறையே தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயவர்தன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவரும் அதே மக்களவைத் தொகுதிக்குள் உள்பட்ட வாக்காளர்களாகவும் உள்ளனர்.

எஞ்சிய 16 விஐபி தொகுதிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், வேறு தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களாக உள்ளனர். இந்த 3 முக்கிய அணிகள் சார்பில் 26 வேட்பாளர்கள் வெளி மாவட்டங்கள், வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். குறிப்பாக, நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுகவின் ஆ.ராசா (பெரம்பலூர்), அதிமுகவின் லோகேஷ் தமிழ்ச்செல்வன் (சேலம் தெற்கு). பாஜகவின் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் (விருகம்பாக்கம்) ஆகிய மூவரும் வெளி மாவட்ட வேட்பாளர்களாவர்.

5 விஐபி தொகுதிகளில் மட்டுமே திமுக, அதிமுக, பாஜக நேரடிப் போட்டி:

17 விஐபி தொகுதிகளில், தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, பெரம்பலூர் ஆகிய 5 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாகக் களம் காண்கின்றன.

வேலூர், பெரம்பலூரில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தார் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதன்மூலம், பிற விஐபி தொகுதிகளைவிட இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் பரபரப்பு சூடிபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தத் தொகுதிகளைச் சேர்ந்த 3 கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமன்றி வாக்காளர்களும் தேர்தல் களத் தில் பல சுவாரஸ்யங்களை எதிர் நோக்கி இருக்கின்றனர்.

வரிந்து கட்டும் தொண்டர்கள்: மண்ணின் மைந்தர்களும், சமானியர்களும் போட்டியிடும் தொகுதிகளைவிட, நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணும் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவதற்கே நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தீவிரம் காட்டுகின்றனர்.

கடந்த தேர்தலில் அரசியல் அறிமுகம் இல்லாமலும், சாமானியராக இருந்தும் வெற்றி பெற்ற பல எம்.பி.க்கள். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இவர்களில் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு. வாக்கு சேகரிக்கப் புறப்பட்டவர்களை நோக்கி மக்கள் மட்டுமன்றி கட்சி நிர்வாகிகளும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். ஒவ்வொருதேர் தலிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது. எனினும், நட்சத்திர வேட்பா ளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் விலக்கு அளித்து தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சிப் பணியாற்ற வரிந்து கட்டி நிற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com