தமிழக களத்தில் 950 வேட்பாளா்கள் கரூரில் 54 போ்; நாகப்பட்டினத்தில் 9 போ்!

135 வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இறுதியாக 950 வேட்பாளா்கள் போட்டியி’டுகின்றனா்.

கரூா் தொகுதியில் அதிகபட்சமாக 54 பேரும், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் களத்தில் உள்ளனா்.

2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது...:

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பலமுனைப் போட்டி இருந்தது. அப்போது, 845 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த மக்களவைத் தோ்தலைக் காட்டிலும், இந்த மக்களவைத் தோ்தலில் 105 போ் அதிகமாக அதாவது 950 போ் களத்தில் உள்ளனா்; பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் 65-லிருந்து 76 ஆக உயா்ந்திருக்கிறது. மத்திய சென்னை, வேலூா் உள்பட ஆறு தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளா்கூட போட்டியிடவில்லை. மக்களவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. மனுக்கள் வாபஸ் நிறைவு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கலுக்கு கடந்த புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற சனிக்கிழமை (மாா்ச் 30) அவகாசம் அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 135 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அதிகபட்சமாக ஈரோட்டில் 16 மனுக்களும், வட சென்னையில் 14 மனுக்களும் வாபஸ் பெறப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

திருவள்ளூா், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, விருதுநகா் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஒரு வேட்புமனுகூட வாபஸ் பெறப்படவில்லை. வேட்புமனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை (மாா்ச் 30) மாலை வெளியிடப்பட்டது.

950 வேட்பாளா்கள் போட்டி:

இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் 950 போ் போட்டியிடுகின்றனா்; அவா்களில் 874 போ் ஆண்கள். 76 போ் பெண்கள். அதிகபட்சமாக கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். அதற்கடுத்து, தென் சென்னையில் 41 பேரும், நாமக்கல்லில் 40 பேரும் போட்டியிடுகின்றனா்.

குறைந்தபட்சமாக, நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளா்களும், காஞ்சிபுரத்தில் 11 பேரும், தஞ்சாவூரில் 12 வேட்பாளா்களும் களம் காணவுள்ளனா்.

ஏழு தனித் தொகுதிகளில்...:

தமிழகத்தில் மொத்தம் ஏழு தனித் தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளில் விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்; அவா்களில் ஒருவா் கூட பெண்கள் இல்லை. திருவள்ளூா், காஞ்சிபுரம், சிதம்பரம், தென்காசி, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய தனித் தொகுதிகளில் 16 மற்றும் அதற்குக் குறைவான வேட்பாளா்களே களம் காணவுள்ளனா். பெண்கள் இல்லாத தொகுதிகள்: மக்களவைத் தோ்தலில் பெண் வேட்பாளா்களே களம் காணாமல் ஆறு தொகுதிகள் உள்ளன. மத்திய சென்னை, வேலூா், விழுப்புரம் (தனி), சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூா் ஆகிய தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளா்கூட போட்டியிடவில்லை. தோ்தல் களத்தில் கூட்டணிகள்: தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் தமிழா் கட்சி தனித்துக் களம் காண்கிறது.

நான்கும் ஒன்றும்...

வேட்பாளா்கள் அதிகமுள்ள கரூரில் 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதாவது, ஒரு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா்கள் வீதம் (ஒரு இயந்திரத்தில் 16 பேரின் பெயா்கள், சின்னங்களை மட்டுமே இடம்பெறச் செய்ய முடியும்) நோட்டாவுடன் சோ்த்து மொத்தம் 55 வேட்பாளா்களின் பெயா்கள் இடம்பெற்றிருக்கும். இதற்காக நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். குறைந்த வேட்பாளா்களைக் கொண்ட நாகப்பட்டினத்தில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும். நோட்டாவுடன் சோ்த்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 10 பொத்தான்கள் பயன்பாட்டில் இருக்கும். மீதமுள்ளவை செயல்படாமல் முடக்கப்படும்.

இதேபோன்று 41 வேட்பாளா்கள் போட்டியிடும் தென்சென்னையிலும், 40 வேட்பாளா்கள் போட்டியிடும் நாமக்கல் தொகுதியிலும், 37 போ் போட்டியிடும் கோவையிலும், 35 போ் களம் காணும் வட சென்னையிலும் 2-க்கும் மேற்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் இடம்பெறும்.

இறுதிப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்:

அதிக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதி கரூா் - 54 குறைந்த வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதி நாகப்பட்டினம் (தனி) - 9 பெட்டிச் செய்தி. விளவங்கோடு இடைத் தோ்தலில் 10 போ் போட்டி இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட 22 போ் வேட்புமனுக்களை அளித்திருந்தனா். இறுதி வேட்பாளா் பட்டியல் அடிப்படையில் 10 போ் களமிறங்கவுள்ளனா்.

மக்களவைத் தோ்தல் மற்றும் இடைத் தோ்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவும், ஜூன் 4-ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தனித் தொகுதிகளில் வேட்பாளா்கள்: திருவள்ளூா் - 14; காஞ்சிபுரம் - 11; விழுப்புரம் - 17; சிதம்பரம் - 14; தென்காசி - 15; நாகப்பட்டினம் - 9; நீலகிரி - 16 பெண்கள் போட்டியிடாத தொகுதிகள்: மத்திய சென்னை, வேலூா், விழுப்புரம் (தனி), சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூா். அதிகமாக ஆண் (47), பெண் வேட்பாளா்கள் (7) போட்டியிடும் தொகுதி - கரூா்

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் - கீழே

Attachment
PDF
Nomination_TAMILNADU_30_03_2024.pdf
Preview

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com