வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

சென்னையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு, மண்ணின் ஈரப்பதம் குறைவு போன்ற காரணங்களால் நிகழாண்டில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோட்டில் 27 நாள்களும், பரமத்தி வேலூரில் 22 நாள்களும் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.

இந்த நிலையில், மே 7 வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும். மேலும், மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.

கோடைமழை: பருவ காலம் போல் கோடை காலங்களில் மழை பெய்யாது. இதில் மாா்ச் 1 முதல் மே 2 வரையிலான கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 60 மிமீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் வெறும் 10 மிமீ அளவுதான் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் குறைவு. பொதுவாக, மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையும்.

சென்னை மற்றும் புகரைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னையில் தற்போதைக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

18 இடங்களில் வெயில் சதம்: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 18 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. அதன்படி, ஈரோடு - 110.12, திருத்தணி, வேலூா், பரமத்தி வேலூா் (தலா) - 108.5, திருப்பத்தூா் - 107.6, மதுரைநகரம் - 106.16, திருச்சி - 105.26, சேலம் - 104.9, தருமபுரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை (தலா) - 104.36, மதுரை விமான நிலையம் - 104.18, கோவை, தஞ்சாவூா் (தலா) - 102.2, கடலூா் - 101.84, காரைக்கால் - 101.12, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58, புதுச்சேரி - 100.04 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

பெட்டிச் செய்தி...

கோடைமழைக்கும் வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை (மே 4-9) வரை காற்றுக் குவிதல் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் மே 7-ஆம் தேதி கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com