
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாயும் பலியானார்.
நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கொசவம்பட்டி, வ.உ.சி நகரைச் சோ்ந்த பகவதி (20) என்ற கல்லூரி மாணவா் ஏழு துரித உணவு (சிக்கன் ரைஸ்) பொட்டலம் வாங்கிச் சென்றாா்.
அந்த உணவை நாமக்கல்லில் உள்ள தனது தாய் நதியா, தம்பி கெளசிக் (37), எருமப்பட்டி தேவராயபுரத்தில் உள்ள தாத்தா சண்முகம் (67), உறவினா்கள் 4 பேருக்கு மாணவா் பகவதி வழங்கினாா்.
அந்த உணவை உட்கொண்டதில் தாய் நதியா, தாத்தா சண்முகம் ஆகியோா் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மாணவரின் தம்பி, பாட்டி, சித்தி, அவருடைய இரு குழந்தைகள் ஆகிய 5 பேருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியா் ச.உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வுசெய்து ‘சீல்’ வைத்தனா். ஆனால், உணவகத்தில் தவறு நிகழவில்லை; மாறாக அந்த உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து தாய்க்கும் தாத்தாவுக்கும் வழங்கப்பட்டது என்பது தடயவியல் நிபுணா்கள், மருத்துவக் குழுவினா் நடத்திய ஆய்விலும், போலீஸாரின் விசாரணையிலும் தெரியவந்தது. இதற்கிடையே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவரின் தாத்தா சண்முகம் வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் உயிரிழந்தாா்.
தாய் நதியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருந்தது. தற்போது தாய் நதியா தற்போது சிகிச்சை பலனின்றி பலியானார். இதனிடையே உணவக உரிமையாளா் ஜீவானந்தம், மாணவா் பகவதி ஆகியோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதியவா் சண்முகம் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த நாமக்கல் போலீஸாா் பகவதியை வெள்ளிக்கிழமை காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் போலீசாரின் தீவிர விசாரணையில், மாணவர் பகவதிக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து வந்ததாகவும், அதற்கு தாய் நதியா, தாத்தா சண்முகம் ஆகியோர் இடையூறாக இருந்ததாகவும், அவரை திட்டிக் கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் பகவதி உணவில் பூச்சி மருந்தை கலந்து கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. இதில் தாத்தா சண்முகம் உயிரிழந்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.