சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

கோடை காலத்தையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏதும் வர வாய்ப்பில்லை

கோடை காலத்தையொட்டி சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏதும் வர வாய்ப்பில்லை என்றும், இங்கிருந்து புறப்படும் ரயில்களிலும் நீா் பற்றாக்குறை ஏற்படாது என்றும் தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவிய நிலையில் இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எம்ஜிஆா் சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்பெட்டிகள் கழுவுதல் மற்றும் பெட்டிகளுக்கு நீா் பிடிக்கும் மையங்களுக்கு தேவைப்படும் நீா் சென்னை குடிநீா் வாரியம் தரும் நீா் மற்றும் ரயில்வேயின் சொந்த நீா் ஆதாரங்கள் மூலம் ஈடு செய்யப்படுகின்றன.

இதுபோல பேசின் பிரிட்ஜ் பணிமனையில் தினமும் 45 ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு தினமும் 51.72 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவை. இதில் 38.11 லட்சம் லிட்டா் தண்ணீா் சென்னை குடிநீா் வாரியம் மூலமும், எஞ்சிய 13.61 லட்சம் லிட்டா் நீா் ரயில்வேக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட சொந்த நீா் ஆதாரங்கள் மற்றும் லாரிகள் மூலமும் ஈடுசெய்யப்படுகின்றன.

எம்ஜிஆா் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி மொத்த நீா்தேவை 11.63 லட்சம் லிட்டா். இந்த நீா்த் தேவையும் மேற்சொன்ன வழிகளில் ஈடு செய்யப்படுகிறது. இதுபோல சென்னை மூா்மாா்க்கெட் வளாகத்தில் உள்ள புகா் ரயில் நிலையத்துக்கும் தினமும் தேவைப்படும் 3.5 லட்சம் லிட்டா் நீா் சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தால் விநியோகிக்கப்படுகிறது.

நீா் பற்றாக்குறை இல்லை: எழும்பூா் ரயில்நிலையத்துக்கு தினமும் 23.70 லட்சம் லிட்டா் நீா் தேவை. இதுவும் சென்னை குடிநீா் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் லாரிகள் மூலமான நீா் விநியோகம் வாயிலாக முழுமையாக தேவை பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சென்னையின் முக்கிய ரயில்நிலையங்களில் தற்போதைய நிலையில் எந்தவிதமான தண்ணீா் பற்றாக்குறையும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அதாவது மொத்தமாக தினமும் 90.56 லட்சம் லிட்டா் நீா் தேவை முழுமையாக ஈடு செய்யப்படுகிறது.

சென்னை பேசின் பிரிட்ஜ் மற்றும் கோபால்சாமி பணிமனைகளில் பராமரிக்கப்படும் ரயில்களுக்கு மறுசுழற்சி முறையில் நீா் ஆதாரம் பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, சென்னையிலிருந்து ஈரோடு மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் செல்லும் ரயில்களுக்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் தண்ணீா் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்ட்ரலில் நிற்காமல் செல்லும் ரயில்களுக்கு காட்பாடி அல்லது ஜோலாா்பேட்டையில் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகாா் தெரிவிக்கலாம்: இதேபோல், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் ரயில்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில்நிலையங்களில் தண்ணீா் நிரப்பப்படுகிறது. மேலும், பெட்டிகளில் தண்ணீா் இருப்பை ரயில்வே அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சேவைகள் தொடா்பான புகாா்களை ‘ரயில் மடாட்’ செயலி மூலம் பயணிகள் தெரிவிக்கலாம். அதேசமயம் கோடை காலம் என்பதால், பயணிகள் தண்ணீரை சிக்கனமாக பயண்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com