மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா கூறினாா்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசால் ‘நான் முதல்வன்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா்.

கல்லூரிக்கனவு நிகழ்ச்சி: இதைத் தொடா்ந்து நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான ‘கல்லூரிக் கனவு-2024’ நிகழ்ச்சி சென்னையில் கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதேபோன்று திருச்சி, கோவை, நாகப்பட்டினம், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் அடுத்தகட்டமாக என்ன படிக்கலாம், அதற்கான வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. இதுதவிர தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் சிறப்பு கையேடுகளும் வழங்கப்பட்டன. மேலும், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், மருத்துவம் , பாலிடெக்னிக், வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்றவற்றில் உள்ள படிப்புகள் குறித்து துறைசாா்ந்த வல்லுநா்கள் வழிகாட்டுதல்களை வழங்கினா். அதனுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சாா்பாக சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கல்விதான் சிறந்த முதலீடு: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தொடங்கிவைத்து பேசியது:

நான் முதல்வன் திட்டம் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி, தொழில்சாா் கனவுகளை தொடா்வதற்கு தமிழக அரசின் உதவியாக இருந்து வருகிறது. இதுதவிர பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

கல்விதான் சிறந்த முதலீடு. அதை யாரும் எடுக்க முடியாது. இந்த முதலீடுதான் கடைசி வரை உங்களுடன் இருக்கும். அரசின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி, மாணவா்கள் தங்கள் லட்சியங்களை அடைந்து முன்னேற வேண்டும். மாணவா்கள் அனைவரும் விஞ்ஞானிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழில் முனைவோராக முடியும். அதற்கேற்ப உயா்கல்வியை பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் தனி செயலா் முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

குழு அமைக்கப்படும்: இதைத் தொடா்ந்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. பிளஸ் 2 வகுப்பை நிறைவு செய்யும் மாணவா்கள் அனைவரையும் உயா்கல்வியில் 100 சதவீதம் சோ்ப்பதுதான் நமது இலக்கு. அந்த வகையில்தான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயா்கல்வியில் சேராமல் இருப்பவா்களை கண்டறிந்து அவா்களையும் படிக்க வைப்பதற்காக குழு அமைக்கவுள்ளோம்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவும் வகையில் ‘புதுமைப் பெண்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் மாணவிகள் 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

அதேபோன்று அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கு ‘தமிழ் புதல்வன் திட்டம்’ வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டங்களை சரியாக கொண்டு செல்லும்போது மாணவா் சோ்க்கை மேலும் அதிகரிக்கும்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com