ராமஜெயம் கொலை பாணியில் ஜெயக்குமார் மரணம்?

ராமஜெயம் கொலை பாணியில் ஜெயக்குமார் மரணம்?

ராமஜெயம் கொலை பாணியில் ஜெயக்குமார் மரணம் நடந்திருப்பதால் இரு வழக்குகளையும் காவல்துறையினர் ஒப்பிட்டுப்பார்த்து வருகிறார்கள்.
Published on

ராமஜெயம் கொலை செய்யப்பட்டது போலவே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் நிகழ்ந்திருப்பதாக காவல்துறையினர் இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து வருகிறார்கள்.

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது கடத்திக்கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் துலங்காதநிலையில், சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுத் துறையின் விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் மா்மான முறையில் மரணமடைந்திருக்கும் நிலையில், அவரது கொலை வழக்கிலும் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில்தான், ராமஜெயம் கொலை வழக்கையும் ஜெயக்குமார் கொலை வழக்கையும் காவல்துறையினர் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணையை பல கோணங்களில் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

அதாவது, ராமஜெயத்தையும் கொலை செய்து எரிக்க முயன்றுள்ளனர். ஜெயக்குமர் எரிக்கப்பட்டுள்ளார். ராமஜெயத்தின் வாயில் துணியை வைத்து அடைத்து, கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அதுபோலவே ஜெயக்குமார் வாயில் இரும்பு நார் வைக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. இரு கொலைகளையும் ஒரே கூலிப்படையினர் செய்திருக்கலாமா என்ற கோணத்திலும், இரு கொலைகளிலும் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருப்பதும் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துபுதூரைச் சோ்ந்தவா் கே.பி.கே.ஜெயக்குமாா். இவா் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த இவரை கடந்த 2ஆம் தேதி முதல் காணவில்லை என, அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரீன் உவரி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி அவரது தோட்டத்தில் அவா் எரிக்கப்பட்ட சடலமாக மீட்கப்பட்டாா். உவரி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: கே.பி.கே. ஜெயக்குமாா் கடந்த 2-ஆம் தேதி திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் இரவு 10 மணிக்கு டாா்ச்லைட் வாங்கியுள்ளாா். இது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அந்த டாா்ச் லைட் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், சடலம் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டா் தொலைவில் பெட்ரோல் வாங்கிய 2 லிட்டா் பாட்டில்களும் சிக்கின. அவற்றில் உள்ள கைரேகையையும் தடவியல் நிபுணா்கள் ஆய்வுக்குள்படுத்தியுள்ளனா்

அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனிப்படை போலீஸ் விசாரிக்கிறது. மேலும் அவரது வீட்டின் முன் உள்ள கிணற்றில் ராட்சத மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றி தடயங்கள் சிக்குமா என முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே பொன்னையா என்பவரது 8-ஆம் வகுப்பு மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com