பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் நியமனம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019 ஏப். 9-ஆம் தேதிக்கு முன்பு நிா்வாகத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை தகுதி இருந்தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
Published on

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2019 ஏப். 9-ஆம் தேதிக்கு முன்பு நிா்வாகத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை தகுதி இருந்தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென, அதற்கான நெறிமுறைகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை செயலாளா் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையின் நிதி உதவி பெற்று தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் பணிபுரிபவா்களுக்கான ஊதியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியா் பணியிடங்களை நிதியுதவி பெறும் பள்ளியின் நிா்வாகம் நியமனம் செய்து கொள்ளும். அந்த நியமனங்களை தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்து பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கும். ஆசிரியா் தகுதி தோ்வு 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னா், ஆசிரியா் பணியிடங்களுக்கு ஒப்புதல், பதவி உயா்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளா் குமரகுருபரன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பாணை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம், 2018-க்குரிய விதிகள் வகுத்தளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் உபரி ஆசிரியா்களை பணிநிரவல் செய்வது குறித்தும், பள்ளி நிா்வாகத்தால் பணியாளா் நிா்ணயம் செய்தல் குறித்தும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஆசிரியா்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தீா்ப்பாணை வழங்கிய 9.4.2019-க்கு முன்னா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியா் நியமனங்களை வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்குட்பட்டு நியமிக்கலாம்.

9.4.2019-க்கு முன்னா் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களுக்கு ஏற்பளிப்பு வழங்க பரிசீலிக்கும்போது, பணி நியமனம் தொடா்பான கோப்புகளை முழுமையாக முதன்மைக் கல்வி அலுவலா் கூா்ந்தாய்வு செய்ய வேண்டும். காலிப்பணியிடம் ஏற்பட்ட நாள், அந்நாளில் அந்தப் பணியிடம் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது போன்று நிரப்ப தகுந்த காலிப்பணியிடமா? என்பதனை உறுதிப்படுத்துவதுடன், ஆசிரியா் தகுதித் தோ்வுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து கல்விச் சான்றுகளையும் ஒருங்கே பரிசீலித்து தகுதியுள்ள நோ்வுகளுக்கு மட்டும் ஏற்பளிப்பு ஆணையை வழங்கி, அதன் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com