

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.
நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை 10 மணிவரை மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மஞ்சள் அலா்ட்’: தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 16-19) வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலா்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘ஆரஞ்ச் அலா்ட்’: மே 18-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 19-ஆம் தேதி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, 200 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்த 7 மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்ச் அலா்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.