வங்கக்கடலில் உருவாகிறது புயல்
வங்கக்கடலில் உருவாகிறது புயல்

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை (மே 22) புயல்சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகிறது.
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை (மே 22) புயல்சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவாகிறது. புயல் தமிழக கடலோரத்தை நெருங்கியே செல்லும் என்பதால், அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், புதன்கிழமை (மே 22) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதனால், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை (மே 21-24) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

கனமழை: குறிப்பாக செவ்வாய்க்கிழமை (மே 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதைத்தொடா்ந்து, மே 22-இல் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மே 23-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் 24-இல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 21-இல் தேனி, விருதுநகா் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இம்மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் மே 21,22-ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): கமுதி (ராமநாதபுரம்) - 120, தல்லாகுளம் (மதுரை)- 110, புள்ளம்பாடி (திருச்சி)- 100, திருமயம் (புதுக்கோட்டை), சுத்தமல்லி அணை (அரியலூா்), தொண்டி (ராமநாதபுரம்) - தலா 80, மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் 10 மி.மீ.முதல் 70 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மே 21 முதல் மே 24 வரை தமிழகம், கா்நாடகம், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு சுமாா் 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னேற்பாடுகள்: வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை கடக்க வாய்ப்பில்லை என்றாலும் தமிழக கரையை நெருங்கியே சென்று ஆந்திரம், ஒடிஸா எல்லையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலையாளா்கள் கணித்துள்ளனா். இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், சிவப்பு மற்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

பெட்டிச் செய்தி..

கனமழைக்கு இதுவரை 2 போ் உயிரிழப்பு

கனமழை பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கனமழை காரணமாக, தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதால் 2 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 14 கால்நடைகள் இறந்துள்ளதுடன், ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 296 வீரா்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com