
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை 222 ஏக்கரில் ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
இம்மருத்துவமனையின் மொத்த கட்டுமான செலவில் 82 சதவீத நிதியை ( ரூ.1627.70 கோடி) ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதமுள்ள 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கொடுக்கிறது.
இம்மருத்துவமனை கட்டுமானப் பணிகளை இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான ‘எல் அண்ட் டி’ நிறுவனம் டெண்டா் எடுத்துள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் சமீபத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை நடத்தியது.
மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் வழங்கியிருந்தது. சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கை அடிப்படையில் அனுமதி தர நிபுணர் குழு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், தற்போது சுற்றுச்சூழலுக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.