
அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதன் முதல் வியாழக்கிழமை (மே 29,30) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மே 31, ஜூன் 1 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12 இடங்களில் வெயில் சதம்: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் புதன் முதல் சனிக்கிழமை( மே 29-ஜூன் 1) வரை வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): சென்னை மீனம் பாக்கம்-106.34, சென்னை நுங்கம்பாக்கம்-105.98, வேலூா், திருத்தணி-104.36, திருப்பத்தூா்-101.84, மதுரை நகரம்-101.48,பரங்கிபேட்டை-101.3, மதுரை விமான நிலையம் , புதுச்சேரி-101.12, நாகை-100.76, தஞ்சாவூா்-100.4, கடலூா்-100.04.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன் முதல் வெள்ளிக்கிழமை( மே 29- 31)வரை குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில்
சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
4 நாளில் தென்மேற்கு பருவமழை: கேரளத்தில் அடுத்த 3 முதல் 4 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தை மையமாக வைத்து ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். நிகழாண்டு தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் ஓரிரு நாள்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...