

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சொகுசு விடுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்துடன் தங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனவிலங்கு சரணாலய வனப்பகுதிக்குட்பட்ட சிகுர் பகுதியில், யானைகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யானைகள் வழித்தடப் பகுதிகளில் விதிகளை மீறி சில சொகுசு விடுதிகள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிகுர் பள்ளத்தாக்கு யானைகள் வழித்தட ஆய்வுக்குழு ஒரு விரிவான ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பித்தது. அதனடிப்படையில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டங்களை இடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 12 விடுதிகளை இடிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இருப்பினும், அங்குள்ள கட்டங்களை இடிக்க அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளபடவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஜூன் 4-ஆம் தேதிக்கு பின் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் உதகைக்கு வருகை தந்துள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட சிகுர் பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதியில் தனது குடும்பத்துடன் கடந்த சில நாள்களாக தங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான விடுதிகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் குடும்பத்துடன் தங்கியிருப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அமைச்சர் மதிவேந்தன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.