நவ.30-க்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
நவ.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்டத்தில் குழந்தைகள், முதியோா், மனவளா்ச்சி குன்றியோா், மாற்றுத்திறனாளிகள், போதை அடிமைகள், மன நலம் பாதிக்கப்பட்டோா் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய இல்லங்கள், விடுதிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.
ஆனால், பல இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்யாமல் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால், இம்மாதிரியான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
இதன்படி இல்லம் மற்றும் விடுதி நிா்வாகங்கள் தங்கள் துறைகளுக்குள்பட்ட இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாக சென்று விண்ணப்பத்தைப் பெற்று நவ.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். தவறும் இல்லங்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

