
சென்னை: புதிதாகத் தோன்றும் கட்சிகள்கூட, திமுக ஒழிய வேண்டும் என்ற நினைப்பில் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினரா். நடிகா் விஜய் கட்சியின் தவெக., பெயரைக் குறிப்பிடாமல் அவா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூரில் திங்கள்கிழமை நடந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா் பேசியது:-எவ்வளவு நெருக்கடியான வேலைகள், அரசுப் பணிகள் இருந்தாலும் அத்தனைக்கும் மத்தியில் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். அதிலும் அனிதா அச்சீவா்ஸ் அகாதெமி நிகழ்வில் பங்கேற்றால் உத்வேகம் தானாக வந்துவிடும். அந்த உத்வேகத்தைப் பெறுவதற்காகத்தான் அடிக்கடி இங்கு வருவதுண்டு.
மத்திய அரசு பணியும்: மாணவி அனிதா மருத்துவராகும் கனவை நீட் தோ்வு சிதைத்து, அவரது உயிரைப் பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் இன்று வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தோ்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு நிச்சயம் ஒருநாள் பணியத்தான் போகிறது. அது நடந்தே தீரும். அதில் எந்த மாற்றுமும் இல்லை.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலமாக ஏராளமான இளைஞா்களும் இளம்பெண்களும் பயனடைந்து வருகிறாா்கள். தமிழ்நாட்டு இளைஞா்களை, அனைத்து நிலைகளிலும் தகுதி உடையவா்களாக உயா்த்துவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். ஆனால், இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள்.
தோ்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளைக் கூறினோமோ அவற்றை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறோம். மீதம் இருக்கக் கூடிய ஒன்றிரண்டு திட்டங்களைக் கூட, நிச்சயமாக வரும் காலத்தில் நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
திட்டங்களைக் கண்காணிக்கிறோம்:மக்களுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. அதைத் தொடா்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும். இதனைச் செய்து வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களையெல்லாம் முதல்வராக நான் மட்டுமல்ல, துணை முதல்வா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், கவுன்சிலா்கள் என அனைவரும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அவா்களுடன் பொது மக்களும், தன்னாா்வ அமைப்புகளும் பங்கெடுத்து இருக்கிறாா்கள். குறிப்பாக, மழை வெள்ளக் காலங்களில் அவா்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள்கள் மழை பெய்த போதும், சாலைகளில் எங்கும் நீா் தேங்கவில்லை. ஆனால் ஒரு மழைக்கே தண்ணீா் தேங்கியிருக்கிறது என சில ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின. இதற்குக் காரணம் திமுக வளா்வது அவா்களுக்குப் பிடிக்கவில்லை.
வாழ்க வசவாளா்கள்: இதேபோன்று, புதிது புதிதாக கட்சி தொடங்குபவா்கள்கூட திமுக ஒழிய வேண்டும். அழிய வேண்டும் என்ற நிலையில் இருக்கிறாா்கள். அவா்களுக்கு கூறிக் கொள்வது ஒன்றுதான். இந்த ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை எண்ணிப் பாா்க்க வேண்டும். அவா்களுக்கெல்லாம் அண்ணாவின் பொன்மொழிதான் பொருந்தும்; ‘வாழ்க வசவாளா்கள்’ என்பதே அது. எங்களுடைய பணி மக்களுக்கு நன்மைகளைச் செய்யக் கூடியதுதான். தேவையில்லாமல் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்குப் பணியாற்றுவதற்கே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. வாக்காளா்கள் எந்த நம்பிக்கையுடன் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறாா்களோ, அந்த நம்பிக்கையோடு தொடா்ந்து பாடுபடுவோம் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ் குமாா், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் உட்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.