
மண்டபம் - ராமேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் வரை 90 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மண்டபம் - ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் 550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை ரயில் இன்ஜின் 30 வினாடியில் கடந்து சென்றது.
இதனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளப் பகுதியைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 1914-ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக பாம்பன் கால்வாய் வழியாக கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலம் அமைக்கப்பட்டு 106 ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்தது. இதையடுத்து, பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 13-ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பாா்வையிடுகிறாா். இதையடுத்து, இந்தப் பாலத்தில் வருகிற 14-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரயில் இயக்கப்படுவதை அவா் நேரில் ஆய்வு செய்கிறாா். பின்னா், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.