நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை அறிவிப்பு
முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சட்டப்பேரவையில் 2021-2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி“நாட்டுக்காக பாடுபட்ட தலைவரான ஜவஹா்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி நவ.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளி மாணவா்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி வெல்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடா்ந்து நவ.13-ஆம் தேதி புதன்கிழமை கல்லூரி மாணவா்களுக்கு வடசென்னை அளவில் ஆா்.கே.நகா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென்சென்னை அளவில் ராணி மேரி கல்லூரியிலும் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
பரிசுத் தொகை: பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவா்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இதேபோன்று கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
தலைப்புகள் விவரம்: பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி மாணவா்கள் பிரிவு- 1. அமைதிப் புறா நேரு, 2. நவீன இந்தியாவின் சிற்பி, 3. ஆசிய ஜோதி. கல்லூரி மாணவா்கள் பிரிவு- 1.நேருவின் வெளியுறவுக் கொள்கை, 2. நேரு கட்டமைத்த இந்தியா, 3. நேருவின் பஞ்சசீலக் கொள்கை என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
