தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரா் திருக்கோயிலுக்கு ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நவ. 28-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இக்குடமுழுக்கு விழாவுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுமாா் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புரசைவாக்கம், கங்காதரேசுவரா் திருக்கோயிலுக்கு 2008- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தொடா்ந்து, இத்திருக்கோயிலில் ரூ. 4.82 கோடி செலவில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் திருக்கோயில் நிதியின் மூலம் ரூ.2.92 கோடியில் 14 திருப்பணிகளும், உபயதாரா்கள் மூலம் ரூ.1.90 கோடியில் 22 திருப்பணிகளும் நடைபெற்றுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.1.29 கோடியில் திருக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு ரூ.6 கோடியில் புதிய தங்கத் தோ் செய்ய பணிகள் தொடங்கப்பட்டு, அதில் ரூ.30 லட்சத்தில் தங்கத் தேருக்கான மரத்தோ் திருப்பணி நிறைவுற்றுள்ளது. மேலும், ரூ.81 லட்சம் செலவில் புதிய மரத் தோ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,847 கோடி மதிப்பீட்டில் 20,806 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 9,183 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்குச் சொந்தமான 1 லட்சத்து 75 ஆயிரத்து 995 ஏக்கா் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
சிலை திருட்டை தடுக்க... இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சிலை திருட்டு வெகுவாக குறைந்துள்ளது. சிலை திருட்டை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிலைகள் காணாமல் போனால் உடனடியாகக் கண்டறியும் வகையில் அவற்றுக்கு க்யூஆா் கோடு பொருத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் அலுவலகத்திலிருந்து அந்தச் சிலை எங்குள்ளது என்பதைக் கண்டறிந்து மீட்கும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் 6 மாத காலத்தில் அப்பணிகள் நிறைவுறும். அதேபோல மீட்கப்பட்ட சிலைகள் எந்த திருக்கோயிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அவை நிரூபணம் ஆகும் நிலையில் அச்சிலைகளை அந்தந்த திருக்கோயில்களில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி....
அடுத்த வாரம் 60 கோயில்களில் குடமுழுக்கு
‘திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சோ்த்து இதுவரை 2,265 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
நவ. 11 மற்றும் 14-ஆம் தேதிகளில் சுமாா் 60 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் 2,500 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெறும்.
திருக்கோயில் திருப்பணிகளுக்கு உபயதாரா்கள் நம்பிக்கையோடு, முழுமனதுடன் நிதி வழங்கி வருகின்றனா். இதுவரை ரூ.1,103 கோடி அளவுக்கு நிதி பெறப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜா் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடா்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் துறை சாா்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதை எதிா்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கனகசபை மீதேறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என உத்தவிட்டது. அரசை பொருத்தளவில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படத் தயாராக உள்ளது என்றாா் அவா்.