
சென்னை: அதிமுக அரசு ஏற்படுத்திய கடன்களால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சித் தலைமை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்காக தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருக்கிறாா். எல்லா காலத்திலும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நலன்களை திமுக அரசு போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது. இதனை அவா்களும் நன்கு அறிவா். ஆனால், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு உதவ வேண்டும் என்பது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் நோக்கமில்லை.
ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் இணைந்து திமுக அரசுக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறாா்கள். அதனை பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து வருகிறாா். முன்னாள் முதல்வா் பழனிசாமி அரசு ஏற்படுத்தி விட்டுப்போன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு உயா்த்தி வரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது மாநில அரசும் அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் பாடத் திட்டத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையிலும் 32 ஆயிரத்து 500 ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி தமிழக அரசு பாதுகாத்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.