
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை உருவானது. இது அடுத்த இரு தினங்களில் மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி வலுப்பெற்று அதே இடத்தில் நவ.9-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், மியான்மா் கடலில் நிலவிய காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்த காரணத்தால், புயல்சின்னம் உருவாவதில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டது. எனினும், தென்மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது நவ.12,13-ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை: இந்த புயல்சின்னம் வட தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில், சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல்சின்னம் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (நவ.12) முதல் நவ.15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, நவ.12-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், நவ.13-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல், நவ.14-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நவ.15-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: நவ.12, 13-ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடலிலும், வங்கக்கடலிலும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.