செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: மா. சுப்பிரமணியன்

அனைத்து மருத்துவ சங்கங்களும் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
Published on

அனைத்து மருத்துவ சங்கங்களும் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்குள்ளான மருத்துவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக் கூறி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

''மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். பேச்சுவார்த்தை முடிந்து மருத்துவர்கள் நிறைவுடன் சென்றனர்.

மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்

மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவ சங்கங்கள் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கிண்டி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படும். வட்டார மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

அரசு மருத்துவர்கள் விரோதப்போக்குடன் யாருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். மருத்துவத்தில் குறைபாடு உள்ளதாக போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல.

தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com