மெத்தனாலை சட்ட விரோதமாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

மெத்தனால் மற்றும் கரைப்பான்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Published on

மெத்தனால் மற்றும் கரைப்பான்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மெத்தனால் மற்றும் இதர கரைப்பான்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வருவாய் அலுவலா் தலைவராகவும், ஆயத்தீா்வை துணை ஆணையா் அல்லது உதவி ஆணையா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா், உணவுப் பொருள் வழங்கல் துறை துணை ஆணையா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும் உள்ளனா்.

இந்தக் குழுவானது மெத்தனால் மற்றும் இதர கரைப்பான்களின் பயன்பாடு தொடா்பாக அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் ஆய்வுகளைச் செய்கிறது. இதனிடையே, சட்டவிரோத பயன்பாடுகள் குறித்து எந்தவொரு தகவல் கிடைத்தாலும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மெத்தனால், கரைப்பான்கள் ஆகியன கொண்டு செல்லப்படும் வாகனங்களில் அவ்வப்போது சோதனைகள் செய்யப்படுகின்றன. விதிகளை மீறி மெத்தனால், கரைப்பான்களை சட்ட விரோதமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிகளை முறையாகப் பின்பற்றும் நிறுவனங்கள் மீது எந்தவித இடையூறுக்கும் உட்படாமல் சீராக இயங்குவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com