Martin
மார்ட்டின் அலுவலகம்Din

கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது பற்றி...
Published on

கோவை: கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை காலையிலேயே இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும், சென்னையில் மார்ட்டினுக்கு சொந்தமான போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

Martin
மார்ட்டின் வீடுDin

மார்ட்டினுக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரிக்குமாறு விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த் நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது, தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.

இதனை அடுத்து, நாகராஜன், மார்டின், மார்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த விவராகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மார்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மார்ட்டின் உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.

வழக்கைப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com