மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை விடுவித்தது எப்படி? உச்ச நீதிமன்றம்

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை விடுவித்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு
Published on
Updated on
2 min read

புது தில்லி: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை உயர் நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர் நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

மருத்துவர் சுப்பையா கொலையின் பின்னணி!

இரு தரப்பினருக்கு இடையே இருந்த நிலப் பிரச்னை தொடா்பாக நரம்பியல் மருத்துவா் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விதிக்கப்பட்ட 7 போ், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவா் என 9 பேரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.

திட்டமிட்டு, நரம்பியல் மருத்துவா் சுப்பையா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013 செப்டம்பா் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியா் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்குரைஞா் பாசில், பொறியாளா் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டா் ஜேம்ஸ் சதீஷ்குமாா், பொறியாளா் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த கபடி வீரா் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, 2021ஆகஸ்டில் சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடா்பான விவரங்களை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. இதேபோல, மரண தண்டனையை எதிா்த்து 7 பேரும் ஆயுள் தண்டனையை எதிா்த்து இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனா்.

இந்த வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா் மற்றும் சுந்தா் மோகன் அமா்வு விசாரித்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில், விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும், கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை என வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில், அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாகக் கவனத்தில்கொண்டு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.

அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது எனக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 போ், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவா் என 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீா்ப்பளித்தனா்.

9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com