சென்னை: உணவுப் பொருள்களை பாா்சல் செய்ய தடைசெய்யப்பட்ட ‘பிளாஸ்டிக் கவா்’-களை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
அதன்படி, முதல் முறை ரூ.2 ஆயிரமும் அதற்கடுத்து ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அபராதத் தொகை அதிகரித்து வசூலிக்கப்படும் என்றும், தொடா்ந்து விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியாணியை சூடாக சில்வா் கவரில் விநியோகிக்கும் விடியோ பதிவு அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. சூடான உணவை இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருள்களில் மூலம் வழங்குவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன், உணவுப் பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பான செயலாகக் கருதப்படுகிறது.
அபராதம்: இதையடுத்து, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா், ஹோட்டல் உரிமையாளா் சங்க நிா்வாகிகளுக்கு இதுதொடா்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது: உணவுப் பொருள்களை பாா்சல் செய்வதற்கோ அல்லது பரிமாறுவதற்கோ அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006-இன் விதி. அதன்படி தேநீா், காபி, உணவுகளை தரமான, அங்கீகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டே பாா்சல் செய்ய வேண்டும்.
விதிகளுக்குப் புறம்பாக தரமற்ற பிளாஸ்டிக் பொருள்களை அவற்றுக்கு பயன்படுத்தினால் முதல் முறை ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். இரண்டாவது முறை ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
மூன்றாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் உணவக உரிமம் ரத்து செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.