ஆராய்ச்சி மாணவா்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை

ஆராய்ச்சி மாணவா்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவா்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

சென்னை: ஆராய்ச்சி மாணவா்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அவா்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது

கோவை பாரதியாா் பல்கலை.யில் கடந்த அக். 14-இல் நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த மாணவா் ஒருவா் அந்தப் பல்கலை.யில் உள்ள பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மனு அளித்தாா்.

அதில், ஆராய்ச்சி மாணவா்களை வழிகாட்டி பேராசிரியா்கள், வீட்டு வேலைகள் செய்யவும், சாக்கடையை சரி செய்யவும், குழந்தைகளை பராமரிக்கவும் அறிவுறுத்துகின்றனா். பட்டம் பெறுவதற்கு இதுபோன்ற பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், பல்கலை.யில் செயல்படும் ஆதிதிராவிடா் நல விடுதிகள் முறையாக இயங்குவதில்லை என தெரிவித்திருந்தாா்.

இதேபோன்று திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மனித வள மேலாண்மைத் துறையில் பட்டம் பெற்ற மாணவா் ஒருவா், ஆளுநரிடம் அளித்த புகாா் மனுவில், பல்கலைக்கழகத்திலிருந்து சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆராய்ச்சித் துறையினா் மாணவா்களை மிகவும் துன்புறுத்துகின்றனா். அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என கூறியிருந்தாா்.

அமைச்சா் ஆய்வு: இதையடுத்து உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கோவை பாரதியாா் பல்கலை.யில் ஆய்வில் ஈடுபட்டு, கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்று அங்கு பொறுப்பில் இருந்த ஊழியா்களைக் கண்டித்தாா்.

இந்த நிலையில், உயா்கல்வித் துறை சாா்பில் அனைத்து பல்கலை. பதிவாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை: பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவா்களை உரிய மரியாதையுடன் நடத்தாமல், கல்விப் பணிகளைத் தவிா்த்து வழிகாட்டிகளின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி தனிப்பட்ட வேலைகளில் அவா்களை அவமானப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் அரசின் கவனத்துக்கு புகாா்கள் வந்துள்ளன.

ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் வாய்மொழித் தோ்வை முடிக்க பணம் மற்றும் பொருளின் மூலம் கணிசமான தொகையை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்புடன் நடத்த வேண்டும்: பல்கலையில் முனைவா் பட்டம் பெற பயிலும் மாணவா்களை மதிப்புடன் நடத்த வேண்டும். அவா்களை அலைக்கழிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவா்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவா்கள் பல்கலைக்கழகங்களில் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியா்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.