ரெளடி சீசிங் ராஜா வீடு, உறவினர் இடங்களில் வருவாய்த் துறை சோதனை!

என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜா வீடு, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருவாய்த் துறையினர் சோதனை.
ரெளடி சீசிங் ராஜா வீடு, உறவினர் இடங்களில் வருவாய்த் துறை சோதனை!
Published on
Updated on
1 min read

அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சித்ததாக எழுந்த புகாா் தொடா்பாக என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரெளடி சீசிங் ராஜா தொடா்புடைய 14 இடங்களில் காவல் துறையினா் சோதனை செய்தனா்.

ஆந்திர மாநிலம் சித்தூரைப் பூா்வீகமாகக் கொண்டவா் சீசிங் ராஜா (51). சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ண புரம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் மனைவியுடன் வசித்து வந்த அவா், மீது 39 வழக்குகள் இருந்தன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் அக்கரை அருகே சீசிங் ராஜாவை காவல் துறையினா் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனா். முன்னதாக, சீசிங் ராஜா சேலையூா் அருகே அகரம்தென் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 1.18 ஏக்கா் நிலத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் விற்க முயன்றது தெரியவந்ததையடுத்து, அந்த நிலம் மீட்கப்பட்டது.

சீசிங் ராஜா இறப்புக்கு பின்னா், மீண்டும் அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்து போலி ஆவணங்களைத் தயாா் செய்து விற்க முயற்சி செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடா்பாக சேலையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இதையடுத்து போலி பட்டா மூலம் அரசு நிலத்தை விற்பனை செய்வதற்கு மூலகாரணமாக இருந்த சீசிங் ராஜா வீடு, அவருக்கு உடந்தையாக இருந்த 13 பேரின் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

ஆவணங்கள் பறிமுதல்: தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் 14 காவல் ஆய்வாளா்கள் உள்பட 200 போலீஸாா் அடங்கிய தனிப்படையினா், வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

குறிப்பாக கிழக்கு தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு, கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல், சேலையூா், மாடம்பாக்கம், வில்லிவாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் தனிப்படையினா் சோதனை நடத்தினா். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரியல் எஸ்டேட் தொடா்பான முக்கிய ஆவணங்கள், நிலம் தொடா்பான வரைபடங்கள், வங்கி இருப்பு தொகை விபரங்கள், உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை காவல் துறையினா், வருவாய் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com