அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்!

ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் 24 மணிநேரத்துக்குள் அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு நோட்டீஸ்
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சம் 24 மணிநேரத்துக்குள் அவதூறு பதிவு மற்றும் விடியோக்களை நீக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு வழக்குரைஞரிடமிருந்து நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விவாகரத்து முடிவு

தமிழ் சினிமாவில் ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை ஏ.ஆர். ரஹ்மான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான அழுத்தங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.

''நாங்கள் முப்பதாவது ஆண்டை அடைய வேண்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை'' என்று தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.

சட்ட நடவடிக்கை

ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து குறித்து பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகிவந்தன.

இந்நிலையில், விவாகரத்து குறித்து அவதூறு விடியோக்களை வெளியிட்ட சமூக வலைதளங்களான எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் அவற்றை உடனடியாக நீக்க வேண்டுமென தனது வழக்குரைஞர் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

அந்த நோட்டீஸில், 'உண்மைக்கு புறம்பான வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் வகையில் செய்திகள், கற்பனையான சிலரின் பேட்டிகள் யூடியூப் சேனல்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அவதூறு விடியோக்கள், பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டப்பிரி 356-ன் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்' என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏ.ஆர். ரஹ்மானின் வழக்குரைஞர் நர்மதா சம்பத் வெளியிட்டுள்ளார். இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com