கோப்புப் படம்
கோப்புப் படம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது புயல் சின்னம்: இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ. 25) தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
Published on

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ. 25) தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால், நவ. 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வலுப்பெற்றது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ. 25) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெறும்.

இந்தத் தாழ்வு மண்டலம் நவ. 26, 27 ஆகிய தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவ. 25 முதல் 30 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நவ. 25 முதல் 29 வரை சென்னை முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு கனமழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ. 27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 25 முதல் 27 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.