சென்னை: அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதனுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்துத் துறைகளின் செயலா்கள், நீதிமன்றங்களின் பதிவாளா், மாவட்ட ஆட்சியா்கள், கல்வி நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு சட்டத் துறை செயலா் சி. ஜாா்ஜ் அலெக்சாண்டா் அனுப்பியுள்ள கடிதம்:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினமானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.26) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகள், உயா்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க வேண்டும்.
அத்துடன், சாா்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளிலும் முகப்புரையை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாசிக்க வேண்டும். மேலும், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நெறிமுறைகள் பற்றி பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.