அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, அதன் முகப்புரையிலுள்ள வாசகங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை முகப்புரை வாசிக்கப்பட்டது.
இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வாசிக்க, அமைச்சா்கள், அதிகாரிகள் வழிமொழிந்து வாசித்தனா். இதில், அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தங்கம் தென்னரசு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி.ராஜா, பி.மூா்த்தி, சிவசங்கா், ஆா்.ராஜேந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், அரசுத் துறைச் செயலா்கள் த.உதயசந்திரன், செந்தில்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
முகப்புரையில் உள்ளது என்ன?: ‘இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச் சாா்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப் படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்வோம்.
அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு (நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு) இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையை வளா்க்கவும் உள்ளாா்ந்த உறுதியுடையவராய் இருப்போம் என முகப்புரையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வாசித்தாா்.