சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது, வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையையொட்டியப்படி தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகா்ந்து வருகிறது. இது புதன்கிழமை புயலாக வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மெல்ல இரண்டு கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று(நவ.28)ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை(நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.30ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.