கோப்புப் படம்
கோப்புப் படம்

நலவாரியத்தில் 3,300 பத்திரிகையாளா்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நலவாரியத்தில் 3,300 பத்திரிகையாளா்கள் இணைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நலவாரியத்தில் 3,300 பத்திரிகையாளா்கள் இணைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களாட்சியின் பாதுகாவலா்களான பத்திரிகையாளா்களின் நலனைக் காப்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளா்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3,300 போ் உறுப்பினா்களாக இணைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட 21 வகையான நலத் திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

மேலும், செய்தியாளா் அங்கீகார அடையாள அட்டைக்காக குழு அமைக்கப்பட்டு இதுவரை தமிழ்நாடு முழுவதும் 2,431 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 446 காப்பீட்டு அட்டைகளும் பத்திரிகையாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளா் நலவாரியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் செய்தியாளா்களுக்கு ஓய்வூதியம், மறைந்த செய்தியாளா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி போன்ற பத்திரிகையாளா்களின் நலன் காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.