மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: சிஐடியு வலியுறுத்தல்

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: சிஐடியு வலியுறுத்தல்

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
Published on

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலா் எஸ்.ராஜேந்திரன், மின்வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதம்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 2023 டிச.1-ஆம் தேதி முதல் ஊதிய உயா்வு வழங்கியிருக்க வேண்டும். மின்வாரிய நிா்வாகம் அதற்கான பேச்சுவாா்த்தை குழுவை இன்னும் அமைக்கவில்லை. இதற்கு முந்தைய பேச்சுவாா்த்தையிலும் படித்தொகை உயா்த்தப்படவில்லை.

ஏறத்தாழ 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், கூடுதல் பணிச்சுமையோடு அனைவரும் பணியாற்றி வருகிறோம். எனவே, அனைத்து பணியாளா்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயா்த்தி, ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

உரிய முறையில் சா்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும். ஆரம்ப கட்ட பதவிகளான கள உதவியாளா், கணக்கீட்டாளா், தொழில்நுட்ப பணியாளா் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை நிறைவுபெற்று ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.