மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் உள்ளிட்ட கனிமவளங்களை எடுப்பதற்கான மத்திய அரசின் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபரில் டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியமான கனிமவளங்களை எடுப்பதற்கு ஏலம் விடுவதற்கான மத்திய அரசின் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. கனிமவளங்கள் உள்ள நிலங்களுக்கான உரிமைகள் மாநில அரசிடம் இருப்பதால், மத்திய அரசு, மாநில அரசிடம் முறையான ஒப்புதலைப் பெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், சுரங்கத்துக்காக கோரப்பட்டுள்ள நிலத்தின் தன்மை பல்லுயிர் பாரம்பரிய தளம் என்று சுரங்க அமைச்சகத்தின் கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் குறித்து சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறுகையில், “மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கேட்டது திமுக அரசுதான். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது நாடகம் ஆடுகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
டக்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் அமைச்சர் துரைமுருகன், தனது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் எந்த நடவடிக்கையும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது. அப்பகுதிகளில் நிலவும் சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றி மாநில அரசுக்குத் தெரியும்.
எனவே, மத்திய அரசு மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்தப் பகுதியில் உள்ள நிலத்தை ஏலத்தில்விட அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஏலத்தை நிறுத்த முடியாது என்று அமைச்சகம் அதற்கு அடுத்த மாதமே மாநில அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாநில அரசு தடையின்மை சான்றிதழும் வழங்கவில்லை. டங்ஸ்டன் ஏலத்திற்கான உரிமையையும் கோரவில்லை. மேலும், மாநில அரசு ஏலதாரருக்கு எந்தக் கடிதமும் இதுவரை அனுப்பவில்லை.
சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களுக்கான சட்டம் 1957 ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. டங்ஸ்டன் உள்பட 29 முக்கிய கனிமவளத் தாதுக்களுக்கான ஆய்வு பற்றிய நடவடிக்கைகளை இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது.