காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை (அக்.2) நடைபெறவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்:
காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி காலை 11 மணியளவில் கூட்டத்தைத் தொடங்க வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆா்வத்துடன் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
கிராம மக்கள் அனைவரும் கலந்துகொள்ள ஏதுவாக கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மதச்சாா்புள்ள எந்தவொரு வளாகத்திலும் கூட்டங்களை நடத்தக் கூடாது. கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை, ‘நம்ம கிராம சபை’ எனும் கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விவாதிக்க வேண்டியவை: கிராம சபைக் கூட்டங்களில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை கிராம சபையின் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் குறித்த கூடுதல் தகவல்களையும், தரவுத் தளத்தில் இடம்பெறாதவா்களின் விவரங்களையும் செயலி வழியாகத் தொகுக்க வேண்டும்.
கிராம குடிநீா் உள்கட்டமைப்புப் பணிகளை உறுதி செய்வது, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னா் வீட்டின் குடும்பத் தலைவரின் ஆதாா் எண்ணைப் பெற்று அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை கிராம சபைக் கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.