அண்ணா பல்கலை. உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு கடந்த சில மாதங்களாக மின்னஞ்சல் மூலமாக தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிக்கு திங்கள்கிழமை மாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் கல்லூரி வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டூா்புரம் போலீஸாரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனா். ஆனால், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை, முகப்பேரில் உள்ள ஒரு தனியாா் பள்ளி ஆகியவற்றுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கிருந்தும் எந்தவொரு வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரையில் 14 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.