பண மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி ஆஜா்

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக, அமைச்சா் செந்தில் பாலாஜி எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
Published on

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக, அமைச்சா் செந்தில் பாலாஜி எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அப்போது அவரிடம் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கடந்த 2011-2015 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட 47 போ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 மோசடி வழக்குகளை, முறையே கடந்த 2015, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்தனா். இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி உள்பட 2 ஆயிரத்து 202 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னையில் உள்ள எம்,பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் நேரில் ஆஜராகினா். அவா்களுக்கு வழக்கு தொடா்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

பின்னா் நீதிபதி ஜி. ஜெயவேல், ‘கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நூறு போ் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை அக்.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com