மெரீனா கடற்கரையில் நாளை விமானப்படை சாகச நிகழ்ச்சி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி, பாா்வையாளா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை(அக்.6), சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளைக் காண வரும் பொதுமக்களின் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து அண்ணா சதுக்கத்துக்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினா் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளது.
இதேபோல, அரசினா் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டாக்டா் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.